Editor’s Column
Web Editor’s Column

Wednesday, August 3, 2016 7:40 AM

Very.Rev.Fr.A.M.A.Prabakar

அன்னையின் அன்பு பக்தர்களே !

இயேசுவின் இனிய நாமத்திலும் அன்னையின் அரவணைப்பிலும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், அன்பையும், மகிழ்வையும் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருத்தலத்தின் அதிபராக இவ்விணைய தளம் வழியாக உங்களோடு உரையாடவும், பகிரவும் நம்மை இணைத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விணைய தளம் வழியாக அன்னையின் பக்தர்கள் தங்களது ஆன்மீக தாகத்தை தணித்துக் கொள்கிறார்கள் என்றும் நம்புகிறேன். மேலும் திருத்தலம் வளர்ச்சிக்காக தங்களால் முடிந்த உதவிகளை தாராளமாக தருகின்ற உங்கள் அனைவருக்காகவும் செபிக்கின்றேன், நன்றியையும் தெரிவித்து மகிழ்கின்றேன்.

ஆகஸ்ட்  மாதம் பல சிறப்புகளை கொண்டது, முதலாவதாக தாய் திருநாட்டின் விடுதலை நாள்; நம் தேசதலைவர்களின் பற்று, தியாகம், விடாமுயற்சி, கையளிப்பின் காரணமாக நாம் விடுதலைப்பெற்றோம். இதனால் சுதந்திர காற்றை இன்றும் நாம் சுவாசித்து கொண்டுயிருக்கிறோம். இரண்டாவதாக திருச்சபையில்; அன்னையின் விண்னேற்பு பெருவிழாவும் அதே நாளில் அமைவதால் தனிப்பெரும் சிறப்பு பெறுகிறது. இறைவனுக்காக மண்ணக்கத்தில் தன்னையே தாழ்த்தி கொண்ட அன்னை கன்னிமரியாவை, ஆண்டவர் விண்ணகத்திற்கு உயர்த்தினார். எனவே தாயாம் திருச்சபை இந்நாளை எண்ணி பெரும் மகிழ்ச்சி கொள்கிறது. இம் மாதத்தில் மற்றுமொரு தனி சிறப்பு, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 29, மாலை 05:45 மணிக்கு நடைபெறும் ஆரோக்கிய அன்னையின் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் ஆகும். இந்நாள், அன்னையின் அன்பு பக்தர்கள் அனைவருக்கும் பெரும் மகிழிச்சியையும்  உற்சாகத்தையும் தரக்கூடிய நாளாகும். சாதி, மதம், மொழி கடந்து, எட்டுத்திசையிலும் உள்ள பக்தர்கள் அனைவரும். வேளைநகரில் சங்கமித்து சீரோடும், சிறப்போடும், ஆர்பரிப்போடும் திருச்சடங்கில் பங்கு பெறுகின்றனர். இலசோப இலட்ச மக்கள் கூடி மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தெரிவித்து, அன்னையோடு சேர்ந்து இறைவனுக்கு புகழ்பாக்கள் பாடி பங்கெடுக்கின்றனர்.


இறைவனுடைய இரக்கத்தை முழுமையாக அனுபவித்து மகிழுந்தவர் அன்னை கன்னிமரியாள், ஏனெனில் இறைமகன் இயேசு பிறப்பதற்கு முன், யூதப் பெண்கள் ஒவ்வொருவரும், மெசியா என்னிடம் பிறப்பார் என்று ஏங்கி எதிர்பர்த்திருந்தார்கள் . இறைவன் அமல உற்பவியான கன்னிமரியாவை தேர்ந்தெடுத்து, அவர் வழியாக இயேசுவை பிறக்க செய்தார்."அருள் மிகப் பெற்றவரே வாழ்க" என்று வானவர் வாழ்த்தை கேட்ட மரியா நிறைவாக மகிழுந்திருப்பார். அவர் ஆதிப்பாவத்தினால் தீண்டப்பெறாமல் பாதுகாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் வள்ளமையால் கருவுற்று அன்னை மரியா இயேசுவை பெற்றெடுத்தார். இறைமகன் இயேசுவை பெற்றுடுத்தபோதும் அன்னை மரியா முப்பொழுதும் கன்னியாக இருக்கிறார். ஏனனில் இயேசுவின் பிறப்பில் இறைவனுடைய பங்கெடுப்பு மட்டுமே உள்ளது. இறைவன் எப்பொழுதும் மரியா பக்கமாக இருந்ததால், அன்னை மரியாவும் எல்லாவித இன்ப, துன்ப நிலைகளிலும் ஆண்டவர் பக்கமே இருந்து வந்தார், குறிப்பாக நாசேருத்திலிருந்து பெத்தலேகத்துக்குப் போக அறிவுறுத்தப்பட்டபோதும், எருசலேம் தேவாலயத்தில் தன் மகனை இழந்த போதும், கெத்சமனி  தோட்ட துன்பத்திலும் மரியா இறைவனின் அனைத்து செயல்பாடுகளையும் தன் மனதில் நிறுத்தி தியானித்து வந்தார் என்பது உண்மையாகும்


இந்த ஆண்டை  இரக்கத்தின் ஆண்டாக கொண்டாடி வருகின்றோம். நாம் இவ்வண்டில் ஆன்மீகம் சார்ந்த கடமைகள், சமூகம் சார்ந்த கடமைகள் என்ன என்று அறிந்துள்ளோம். அறிந்தால் மட்டும் போதாது, நம் வாழ்வில் வாழ்ந்தும் காட்டவேண்டும் என்பது தான் உண்மை. அன்னை கன்னி மரியாள் இரக்கமுள்ள தாயாகவே இருக்கிறார். வேளாங்கண்ணி வரலாற்றில் பாரம்பர்யமாக சொல்லப்பட்டு வந்த மூன்று புதுமைகள், பால்காரப் பாலகனின் பால்க்குடத்தைப் பொங்க செய்தது, மோர்கார சிறுவனை நடக்க செய்தது, கடலில் தத்தளித்த கப்பல் மாலுமிகளை காத்தது இவை எல்லாவற்றிலும் அன்னையின் இரக்கத்தை நாம் உணர்கிறோம்.          


"இதோ உன் தாய்; இவரே உம் மகன்" என்ற வார்த்தையை இயேசுவிடம்  கேட்டதிலிருந்து, அன்னை மரியா இரக்கத்தை காண்பித்து வருகின்றார், கலங்கி நின்ற சீடர்கள் அனைவரையும் இரக்கத்தோடு ஒன்று சேர்த்தவர் அன்னை மரியா, எனவே இறை இரக்கத்தின் பிரதிபலிப்பாக அன்னை இருக்கிறார், புனித அம்புரோசியார் கூறுவது போன்று, "இறை இரக்கம் எங்கே இருக்கிறதோ; அங்கே இறைவன் இருக்கிறார் ". அன்னை காட்சி தந்த  இடங்கள் எல்லாவற்றிலும் இரக்கத்தை காணமுடிகிறது. அவர் காட்சி தந்த லூர்து நகர், பாத்திமா நகர், குவாதூலூபே, மெஜூகொரியே, என்று எல்லா இடங்களிலும் இறை இரக்கத்தை அன்னை மரியா பிரதிபலித்து, நம் அனைவரையும் பாவத்திலிருந்து மனமாற்றம் பெற அழைக்கின்றார். அனைத்து ஆரோக்கிய அன்னையின் பக்தர்களோடும் இந்த கதையை பகிர்ந்துக்கொள்ள  ஆசைப்படுகின்றேன்.

மோட்ச்சத்தின் (விண்ணகத்தின்) வாயில் அருகே புனித பேதுரு நின்றுகொண்டு, மறுவாழ்வுக்கு வருபவர்களை, மோட்சத்திற்கும், நரகத்திற்குமாக அனுப்பிக்கொண்டிருந்தார். நல்லது செய்தவர்களை மோட்சத்திற்கும், கெடுதல் செய்தவர்களை நரகத்திற்கும் அனுப்பினார். ஆனால் மோட்சத்தில் கூட்டம் வழிந்தோடியது. உள்ளே இருந்த இயேசுவுக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி இவ்வளவு கூட்டம், என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டு வெளியே வந்து கேட்டார், ஏன் இப்படி இவ்வளவு பேரை அனுப்புகின்றீர், எல்லோருமே நல்லது செய்திருக்கின்றார்களா? என்று கேட்டார். அதற்கு புனித பேதுரு, நான் அனுப்பவில்லை, அதோ பாருங்கள் உங்கள் உங்கள் அம்மா பின்வாயில் வழியாக அனுப்பிக்கொண்டிருக்கிறார், என்றார். இந்த கதை வழியாக, அன்னை எப்படி இறை இரக்கத்தை வெளிப்படுத்துகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. எனவே நம்மீதும் அன்னை மரியா இறை இரக்கத்தை அபரிவிதமாக வழங்குவார் என்று நம்புவோம். வேளாங்கண்ணிக்கு வருகின்ற போது, நாம் நமது வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் இறைவனிடம் பெற்றிட, ஆரோக்கிய அன்னை வழியாக நாமும் இறைவனைப் புகழ்வோம் .


அன்னையின் அன்பு பக்தர்களே திருத்தலத்தில் நடைப்பெறும் அனைத்து வழிப்பாட்டில் உங்களுடைய மன்றாட்டுக்களும், வேண்டுதல்களும் நினைவுக்கூறப்படுகின்றன. அன்னையின் வலிமையான பரிந்துரையால் எல்லாம் நன்றாக நடக்கும். அன்னையை நம்பியவர்கள் எவரும் வெறும் கையராக செல்வதில்லை என்பதை உணர்வோம்.

அன்னையின் அன்பு பக்தர்கள் அனைவரும் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வருகின்றபோது அங்கு நடைபெறுகின்ற திருப்பலி மற்றும் செப வழிப்பாட்டில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தனிப்பட்ட விதத்தில் ஆராதனை ஆலயத்திற்கு சென்று தொடர்ந்து நடைபெறும் ஆராதனையில் பங்குப் பெற்று இறையாசீர் பெற அழைக்கின்றேன். வேளாங்கண்ணி திருத்தலம் "பசிலிக்கா" அந்தஸ்த்துக்கு உயர்த்தப்பட்டதன் நினைவாக தொடங்கப்பட்ட 3 மணிக்கான ஆராதனை சிறப்பாக நடைப்பெறுகிறது. பக்தர்களின் தேவைகளையும் நலனையும் கருதி தொடர்ந்து இவ்வராதனை நடைப்பெறுகிறது.

நம் அனைவருக்கும் இரக்கத்தின் முன்மாதிரியாகவும், முன்னோடியாகவும் இருப்பவர் இரக்கத்தின் அன்னை கன்னி மரியா. அவர் (மரியா) இறை இரக்கத்தை, " ஆண்டவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார்." (லூக்கா 1 : 50) என்று தனது பாடலில் மட்டும் பாடவில்லை மாறாக, தனது உறவினரான எலிசபெத் அம்மாளுக்கு உதவி செய்யவும் விரைகிறார். அங்கு தொடங்கிய அவரது இரக்க பயணம் இன்றும் பல இடங்களில் தனது காட்சிகள் வழியாக ஆண்டவரது இரக்கத்தை காண்பித்து வருகிறார். வேளாங்கண்ணியில் அவரது இரக்கமானது பால்கார பாலகனுக்கு, மோர்கார சிறுவனக்கும், கலங்கி நின்ற மாலுமிகளுக்கும் கிடைத்தது போன்று இலட்சக்கணக்கான பக்தர்களுக்கும் கிடைக்கிறது. ஆண்டவரது கடைக்கண்  பார்வை வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா வழியாக நம் அனைவருக்கும் கிடைக்க வாழ்த்துவது மட்டுமல்ல அதற்காகவும் செபிக்கிறேன்.

மேலும் இந்த இறை இரக்க ஆண்டு எல்லாருக்கும் அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கவும் சகோதர சகோதரிகளுக்காக நம் கரம் நீளவும் வாழ்த்துகிறேன்.

இறை இரக்க தூதுவரான புனித பவுஸ்தினாவே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Related Column