Editor’s Column
Web Editor’s Column

Thursday, September 1, 2016 6:10 PM

Very.Rev.Fr.A.M.A.Prabakar

அன்னையின் ஆண்டுப் பெருவிழா கொண்டாட அனைவரும் விழிப்போடு காத்துக் கொண்டிருந்தோம் உலகமே ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்த மீட்பின் திட்டம் இம்மாதத்தில் அன்னையின் பிறப்பு பெருவிழாவில் ஆரம்பிக்கின்றது. எனவே அன்னைக்கு நமது நன்றியையும் புகழையும் சாற்றுவோம். அன்னையின் பரிந்துரையால் நாம் பெற்றுக்கொண்ட அனைத்து நன்மைகளுக்கும் நன்றி சொல்வோம் அன்னையின் ஆண்டுப்  பெருவிழாவை சிறப்பிக்க பலர் நடைப்பயணமாக கொடியேற்ற தினத்தன்று வந்து பங்கேற்றனர். பலர் திருவிழாவில் பங்கெடுக்க வந்துக் கொண்டிருக்கின்றனர். எனவே அனைவருக்காகவும் அன்னை பரிந்துரைப்பாராக உங்கள் பயணம் நன்றாக அமைய வாழ்த்துகிறேன். வேண்டுகிறேன்.ஆதிப்பெற்றோரின் பாவத்தினால் ஏற்பட்ட கலங்கத்தை நீக்க இறைவன் வகுத்ததே மீட்பு திட்டமாகும். எனவே மனுகுலத்தின் மீது இரக்கத்தை காட்ட நினைத்த இறைவன் விடியற்காலத்தின் நட்சத்திரமான கன்னிமரியாள் வழியாக தம் மகன் இயேசுவை உலகில் பிறக்க வைக்க திருவுளம் கொண்டார். அதற்காக ஆண்டவர் வகுத்த வழி தான் மரியன்னையின் பிறப்பாகும். அப்பிறப்பு விழாவைத்தான் ஆண்டுப் பெருவிழாவாக கொண்டாடுகின்றோம்.

செப்டம்பர் மாதம் 8-ம் தேதி அன்னையின் அனைத்து பக்தர்களும் நினைவுக்கூறும் நாளாகும். திருச்சபை இந்நாளை சிறப்பாக நினைவு கூறுகின்றது. ஏனெனில் அன்னையின் பிறப்பு நாள் இறைவன் புதுமை செய்த நாளாக கருதப்படுகின்றது. அதனால் தான் இந்நாளை பக்தர்கள் அனைவரும் ஆர்வத்தோடும் நன்றி உள்ளத்தோடும் கொண்டாடி நம் ஆன்மிக பயணத்திற்கு விழிப்போடு காத்துக்கொண்டிருக்கும் அன்னையை கொடுத்ததற்கு நன்றி கூறுகின்றார்கள்.ஆண்டவர் இயேசு கல்வாரியில் இறக்கும் தருணத்தில் தன்னுடைய ஒரே சொத்தாக இருந்த "தாயை " அவருடைய சீடர் வழியாக நம் "அனைவரின் தாயாக" ஒப்படைத்தார்.(யோவா 19 : 25-26) எனவே அன்னை நம் அனைவருக்கும் தாயாக இருக்கிறார். கல்வாரி மலையில் இறைமகன் இயேசு வழியாக தம் பணியை அன்னை பெற்றுக்கொண்டார்.

யோவான் சீடரை தம் மகனாக ஏற்றுக்கொண்ட  மரியா, தம் பணி என்ன என்பதை நன்கு தெரிந்துக் கொண்டார். எனவே அவர் நம் ஒவ்வொருவர் மீதும் தனிப்பட்ட அன்பையும் பாசத்தையும் காண்பிக்கிறார். அன்னை அனைவரையும் கைவிடாமல் காத்து வருகின்றார் என்பதை நாம் உணரவேண்டும். " இவரே உம தாய் " என்ற வார்த்தையை யோவான் கேட்டதிலிருந்து அவரை தன்னுடைய தாயாகவே அந்த சீடரும் ஏற்றுக் கொண்டார்.

அன்னையின் ஆண்டுப் பெருவிழாவில் அன்னையை மகிழ்விப்பது மூவொரு இறைவனை மகிழ்விப்பதாகும் எனவே நம்முடைய வெளி கொண்டாட்டதோடு நின்று விடாமல் பாவத்திலிருந்து புது வாழ்வுக்கு வழிவகுக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும் என்று அன்னை விரும்புகிறார். எனவே இறைத்தந்தையின் தகுதியுள்ள பிள்ளைகளாக வாழ அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகின்றார்.

உலகில் பிறக்கும் ஒவ்வொருவரும் இறைவிருப்பத்தினால் இயேசுவால் மீட்படைகின்றனர். ஆனால் அன்னை கன்னிமரியாளை மீட்க இறைவன் தொடக்கத்திலே திருவுளம் கொண்டார் இறைவன் தன் சாயலாக மனிதனை படைத்தார். ஆனால் பாவத்தினால் மனிதன் மாண்பை இழந்தான், பாதையை மாற்றினான். பாவத்திற்கு தன்னை அடிமையாக்கிக் கொண்டான். (தொ.நூ 1: 27) சாத்தானின் சோதனையினால் எல்லாவற்றையும் இழந்தான்; எனவே பரமனாலே விரட்டியடிக்கப்பட்டான். இருப்பினும் இறைவனுடைய இரக்கம் அதிகமாக வழிந்தோடியது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவனின் இரக்கத்தில் வாழ அழைப்பு விடுக்கின்றார். எனவே தான் இரக்கத்தின் ஆண்டை உருவாக்கி இறைவனின் இரக்கத்தை  சுவைக்க அழைப்பு விடுக்கிறார். ஆதிப் பெற்றோர் வீழ்ந்த போதே மீட்பர் இவ்வுலகில் பெண் வழியாக பிறப்பார் அப்பெண் உன் (சாத்தான் )தலையை நசுக்குவாள் என்று உறுதியை மனுகுலத்துக்கு கொடுத்தார். (தொ.நூ 3: 15)

அன்னை கன்னி மரியாவின் பிறப்பு ஆண்டவர் தந்த உறுதியினால் நிறைவேறியது எனவே செப்டம்பர் 8-ம் தேதி நம் அனைவருக்கும் சிறப்பாகும். அன்னை கன்னி மரியாள் "விடியற்காலத்தின் நட்சத்திரம்" ஏனெனில் அன்பும் அமைதியும் சமாதானமும் நிறைந்த மகனை பெற்றெடுப்பார் என்ற வாக்கு அவர் வழியாக முன்னறிவிக்கப்பட்டது. எனவே அவரில் தான் இறைவனின் இரக்க வாயில் திறக்கப்பட்டது நாமும் அவரை "அப்பா தந்தையே" என்று அழைக்கின்றோம். கர்தினால் இல்பேஃடு சூட்சர் நம் திருமுழுக்கின் அழகை இப்படி வர்ணிக்கிறார் முதல் பெண்மணியால் விளைந்த பாவநிலை இரண்டாம் பெண்மணி அன்னை கன்னி மரியாள் வழியாக நீங்கியது வார்த்தையான இறைவன் மீட்க திருவுளம் கொண்டதால் தூய ஆவியால் பாதுகாத்து இறைவனுக்கு கீழ்ப்படிந்து பாவமற்று நடக்கும் அன்னை கன்னி மரியாவை உருவாக்கினார். எனவே தான் அவர் நற்கருணையின் பேழை என்று அழைக்கப்படுகிறார். எனவே அன்னையின் அரும்பணி இன்றும் தொடர்கிறது. அன்னையின் அன்பு பக்தர்கள் ஒவ்வொருவருக்காகவும் தொடர்ந்து பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார். நம்பிக்கையோடு அன்னையின் திருத்தலம் வந்து வரம் பெற்றுச் செல்வோம். நம் கொண்டாட்டம் வெளி அடையாளத்தோடு நின்று விடாமல் நம் உள்ளத்திற்கும் இல்லத்திற்கும் மாற்றத்தையும், மறுவாழ்வையும், நலத்தையும், வளத்தையும் தரும் கொண்டாட்டமாக அமையட்டும்.

“அன்னையின் ஆண்டுப் பெருவிழா வாழ்த்துக்கள் “


Related Column