Editor’s Column
Web Editor’s Column

Tuesday, October 4, 2016 12:43 PM

Very.Rev.Fr.A.M.A.Prabakar

அன்னையின் பக்தர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும், அன்பும் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், உங்கள் ஒவ்வொருவரின் உதவிக்கும், ஒத்துழைப்புக்கும் நன்றியையும் தெரிவித்து மகிழ்கின்றேன்.


         அன்னையின் ஆண்டு பெருவிழா சீறோடும், சிறப்போடும் நடைபெற்றது. அதற்காக ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.


          அக்டோபர் மாதம்; ஜெபமாலைக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். ஜெபமாலை வழியாக இறைமகன் இயேசுவை மையப்படுத்துகின்றோம். நாம் மேற்கொள்ளும் பக்தி முயற்சிகளும் விழாக்களும் சில நாட்களுக்கு மட்டும் தான். உதாரணமாக; வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா, லூர்து அன்னை பெருவிழா; பாத்திமா அன்னை பெருவிழா போன்ற விழாக்களில் சில பக்தி முயற்சிகள் மேற்கொள்கின்றோம். விழாவோடு அவைகளும் நிறைவடைந்து விடுகின்றன. அனால் ஜெபமாலை அப்படி அல்ல. ஓவ்வொரு முறையும்  ஜெபமாலை ஜெபிக்கின்றபோது, அன்னை வழியாக இயேசுவை புகழ்கின்றோம். எனவே ஜெபமாலை பக்தி முயற்சி, சிறந்த பக்தி முயற்சியாகும். இது ஜெபிப்பத்ற்கு சுலபமாகவும், வாழ்வுக்கு அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. எனவே ஜெபமலையைப் பற்றி உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.


           ஜெபமாலை ஓரு பழமையான பக்தி முயற்சியாகும். இதன் வளர்ச்சியில் ஓரு பாரம்பரியம் உண்டு. ஜெபமாலை பழக்கம் துறவிகளிடமிருந்து வந்தது. தொடக்க காலத்தில் துறவிகள், திருப்பாடல்களை செபமாக வாசிக்க வேண்டும். காலப்போக்கில் வாசிக்க முடியாத துறவிகள், திருப்பாடல் வ0சிப்பதற்கு பதிலாக 150 முறை மங்கள வார்த்தை செபம் "அருள் நிறைந்த மரியே வாழ்க"  என்ற செபத்தை சொல்ல வேண்டும் என்று பணிக்கப்பட்டனர்.150 முறை என்னும்போது, எண்ணிக்கை விடாமலிருக்க கற்களைப் பயன்படுத்தினர். அதன் பின்னர் தான் 150 மணிகளை கோர்த்து, செபிக்க ஜெபமாலையாக பயன்படுத்தினர். அன்னை காட்சி கொடுத்த ஓவ்வொரு முறையும் ஜெபமாலை செபித்து, பாவிகளின் மனமாற்றத்திற்காக மன்றாடுங்கள் என்று கூறினார்கள். திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தையர்கள், திருச்சபைக்கு எதிரான தப்பறை கொள்கைகளை முறியடிக்க, துறவிகளை தொடர்ச்சியாக ஜெபமாலை செபிக்க அழைத்தார்கள். அதற்கு பலனும் கிடைத்தது என்பதை வரலாறு நமக்கு சொல்லுகின்றது.

             

ஜெபமாலை செபிக்கும் போது, மாதாவை பற்றி தியானிப்பது அல்ல மாறாக இயேசுவின் வாழ்வையும், போதனையையும் அன்னை கன்னிமரியாள் வழியாக தியானிக்கின்றோம்.


ஜெபமாலையின் நான்கு மறைப்  பேருண்மைகள்:


       1. மகிழ்ச்சிநிறை மறைப்பேருண்மை.

       2. மகிமைநிறை மறைப்பேருண்மை.

       3. துக்கநிறை மறைப்பேருண்மை.

       4. ஓளிநிறை மறைப்பேருண்மை.

இவைகள்  அனைத்திலும், இயேசுவின் பிறப்பும், வாழ்வும், பணியும், பாடுகளும், மகிமையும், தியானிக்கப்படுகின்றன. எனவே ஜெபமாலை தியானிக்க மட்டும் பயன்படும் கருவி மட்டுமல்ல, மாறாக நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் தீமைகளை வெற்றிகொள்ள உதவும் சக்திவாய்ந்த கருவியாகும். திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், "ஜெபமாலை, புதியஏற்பாடு முழுவதையும் தியானிக்க உதவும் ஓரு சிறிய செபம் ஆகும்". என்கிறார்.


          அன்னை கன்னிமரியாள், ஜெபமாலை செபிக்க தொடர்ந்து அழைக்கிறார். 1958ல் லூர்துநகர் காட்சியின்போது பெரியஜெபமாலையை பிடித்துக்கொண்டு சொல்வதைப்போன்று காட்சிகொடுத்தார்கள்.


          1917 - ஆம் ஆண்டு, பாத்திமா நகரில், லூசி, பிரான்சிஸ்கோ, மற்றும் ஜெசிந்தா ஆகிய மூன்று சிறுவர்களுக்கும் தோன்றி ஜெபமாலை செபிக்கும்படி பணித்தார்கள், லூசியாவுக்கு ஜெபமாலையின் அன்னை நானே ! எனவே தொடர்ந்து ஜெபமாலை சொல்லுங்கள் என்று பணிந்தார்கள்.


             புனிதர்கள் ஜெபமாலை பக்தி கொண்டவர்களாய் வாழ்ந்தார்கள். புனித தோமினிக் ஜெபமாலை மீது அதிகம் ஆர்வம் கொண்டு வளர்த்தார். புனித லூயி மான்ஃபோர்டு," ஜெபமாலை செபிப்பவர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள்" என்கிறார்.

             

             திருத்தந்தையர்கள் அனைவரும் தாங்கள் மட்டும் ஜெபமாலை செபிக்கவில்லை மாறாக இறைமக்கள் அனைவரையும் செபிக்க அழைப்புவிடுத்தார்கள். புனித இரண்டாம் ஜான்பால், " நான் உங்களுக்கு ஓர் இரகசியம் சொல்லுகிறேன், ஓவ்வொரு நாளும் ஜெபமாலை சொல்லுங்கள்' மேலும் எந்த ஒரு குடும்பத்தில் ஓவ்வொரு நாளும் ஜெபமாலை செபிக்கின்றார்களோ, அது அழகான குடும்பமாக இருக்கும்" என்கிறார். திருதந்தை  9- ஆம் பத்திநாதர், " ஜெபமாலை சொல்லும் ஒரு படையை எனக்கு தாருங்கள்; இந்த உலகத்தையே மாற்றுவேன்" என்கின்ரார். 16- ஆம்  ஆசீர்வாதப்பர் " ஜெபமாலை, புதிய ஏற்பாடு பற்றிய தியானம் என்று கூறுகின்றார். எனவே ஜெபமாலை ஏழைகளின் விவிலியம் என்று அழைக்கப்படுகிறது.

 

அன்னையின் அன்பு பக்தர்களே !

திருப்பயணிகளின் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள், சிலர் நடைப்பயணமாக 100 கிலோமீட்டர், 200 கிலோமீட்டர்,300 கிலோமீட்டர், என்று திருப்பயணம் மெற்கொள்ளுகின்றனர். அவர்களின் நடைப்பயணத்தின் போது உடல் ரீதியாக தளர்ச்சி ஏற்படலாம், மன  ரீதியாக சோர்வு ஏற்படலாம், மேலும் எதிர்பாராத துன்பங்கள் வரலாம். அப்படி வருகின்றபோது  எல்லோரும் சேர்ந்து ஜெபமாலை சொல்ல ஆரம்பித்தால், நடைப்பயணம் கலைகட்டிவிடும். அனைவரும் வேகமாக நடக்க ஆரம்பித்து விடுவார்கள். எனவே நடைபயணமாக வரும் பக்தர்கள் ஜெபமாலை சொல்லி கொண்டும், பாடல்கள் பாடிக்கொண்டும் வருகின்ற பொழுது, அவர்களது பயணம் வெற்றிப்பயணமாக  அமைகிறது. எனவே ஜெபமாலை ஜெபிப்பது உள்ளத்திற்கு உறுதியையும் உடலுக்கு பலத்தையும் தருகின்றது.


       வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வரும் திருப்பயணிகள் சிலர் மரியாயின் சேனை குழுக்களாகவும், சிலர் வின்சென்ட் தி பால் குழுக்களாகவும், மற்றும் பக்த சபைகளாகவும் வருகை தருகின்றனர். மேலும் சிலர் குடும்ப உறுப்பினர்களோடும், உறவினர்களோடும் வருகின்றனர், மற்றும் நண்பர்களாகவும், உடன் உழைப்பாளர்களாகவும் வருகின்றனர். அப்படி வருகின்றபொழுது அதிகமானோர் அன்னை பீடத்தின் முன் அமர்ந்து தங்களது  மொழியில் ஜெபமாலை ஜெபிகின்றனர். சிலர், மாத குளத்திலும், நடுத்திட்டு ஆலயத்தில் ஜெபமாலை ஜெபித்து செல்கின்றனர். எனவே, உங்களுடைய திருப்பயணம் மிக்க பலனை தரும் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


        அக்டோபர்  மாதம், ஜெபமாலை மாதம் என்று அழைக்கப்படுகின்றது. இம்மாதத்தில் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வருகை தரும் பக்தர்கள் நலனை கருத்தில்கொண்டு, பக்தர்கள் ஜெபமாலையில் பங்கெடுக்க மாத குளத்தில், மரியாயின் சேனையினரின் முன்னிலையிலும், அமல அன்னை கன்னியர்கள் வழிகாட்டுதலிலும், ஒவ்வொரு நாளிலும் காலை 7.00-மணி முதல் மாலை 5.00- மணி வரை நற்கருணை ஆண்டவர் பிரசன்னத்தில் ஜெபமாலை ஜெபிக்கப்படுகின்றது. மேலும், அன்பிய குழுக்களால் மாலை 7.45-மணி முதல் 8.45-மணி வரை அன்னையின் பீடத்தில் ஜெபிக்கப்படுகின்றது. என்வே இந்த மாதம் முழுவதும் அன்னையின் திருத்தலம் வரும் பக்தர்கள் இபபக்தி முயற்ச்சியில் பங்கெடுத்து இறைஅருளையும் அன்னையின் அரவணைப்பையும் பெற்றுக்கொள்ளும்படி  அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். மேலும் திருத்தலத்தில் இருக்கும்போது மட்டும்மல்ல  உங்களது இல்லத்திலும் ஒரே குடும்பமாக ஜெபமாலை ஜெபித்து, அதன்  பலனை பெற  அன்போடு வாழ்த்துகின்றேன்.


        புனித ஜெபமாலை அன்னையே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.


Related Column